அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்று வரும் லிண்ட்சே கிளான்சி தொடர்பான கொலை வழக்கு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னாள் பிரசவம் மற்றும் மகப்பேறு பிரிவில் செவிலியராகப் பணியாற்றிய கிளான்சி, 2023 ஜனவரியில் டக்ஸ்பரி பகுதியில் உள்ள குடும்ப வீட்டில் தனது மூன்று குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
கிளான்ஸின் வழக்கறிஞர்கள் குழந்தைகளின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்பதை தன்னுடைய வாடிக்கையாளர் மறுக்கவில்லை எனவும் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக்கொள்வதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவம் நடைபெற்ற காலத்தில் அவர் கடுமையான மனநல நெருக்கடியை எதிர்கொண்டதாக அவர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாக, பிரசவத்துக்குப் பிந்தைய மனநலக் கோளாறு மற்றும் இருமுனை மனநிலைக் கோளாறு தொடர்பான கடுமையான பாதிப்பு அவருக்கு இருந்ததாக பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது.
இதன் காரணமாக, சம்பவத்தின் போது கிளான்சிக்கு தனது செயல்களின் தன்மை மற்றும் அதன் விளைவுகளை முழுமையாக உணரும் திறன் இருந்ததா என்பது வழக்கின் முக்கிய விவாதமாக உள்ளது. மனநலப் பாதிப்புகள் ஒருவரின் சட்டரீதியான பொறுப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் இந்த வழக்கு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதனால், வழக்கு குற்றவியல் பொறுப்பு மட்டுமின்றி, பிரசவத்துக்குப் பிந்தைய மனநலம் மற்றும் தாய்மார்களுக்கான மனநல ஆதரவு குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வழக்கில் குழந்தைகளின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளும், கிளான்சியின் மனநிலை தொடர்பான பாதுகாப்புத் தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படுகின்றன. வழக்கின் இறுதி முடிவு நீதிமன்ற விசாரணை மற்றும் முன்வைக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். எனவே, தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் மனநல வாதங்களை இறுதி தீர்ப்பாகக் கருத முடியாது.
