உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஷிஷ் சோனி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட காலமாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வந்த நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆஷிஷ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஆஷிஷின் மனைவியை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஷிஷ் மற்றும் அவரது மனைவிக்கு இடையே கடந்த 5 ஆண்டுகளாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நாளிலும் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் எதனால் ஏற்பட்டது, தாக்குதல் நடந்த விதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, உயிரிழந்த ஆஷிஷின் தாயார் தனது மருமகள் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் முழுமையான உண்மைத் தன்மை விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.