தஞ்சாவூரில் அதிமுக சார்பில் தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராகப் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு தவெக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

​ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தவெக அரசு மற்றும் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகப் பல கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.

​”எம்ஜிஆர் ஆட்சி மற்றும் அம்மாவின் ஆட்சி நடப்பதாகக் கூறுவது முற்றிலும் வெட்கக்கேடானது. அப்படி என்றால், அவர்கள் ஆட்சியையே நடத்தட்டும் என்று இவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே?” என்று மிகக் காரசாரமாகச் சீறினார்.

​மேலும், நிதி நெருக்கடி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “நிதி இல்லை என்று இப்போது சாக்குப்போக்கு சொல்றீங்களே… நிதி இல்லை என்று தெரிந்துதானே மக்களுக்கு அள்ளி அள்ளி வாக்குறுதிகளைக் கொடுத்தீர்கள்? நிதி இல்லை என்றால் எதுக்காக வாக்குறுதி கொடுத்தீங்க?” என்று தவெக அரசை வறுத்தெடுத்தார்.