தமிழ் சினிமாவின் யதார்த்தமான கிராமியக் கதைகளின் தந்தை என்று போற்றப்படும் ‘இயக்கநர் இமயம்’ பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார். இச்செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ புதுமுகங்களை அறிமுகம் செய்து, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய பெருமைக்குரியவர் பாரதிராஜா. திரையுலகில் இமயமாக விளங்கிய அவர், நடிகர் விஜய்யின் ஆரம்பகாலக் கட்டத்தில் அவரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டிய சூழல் உருவானபோது, சில காரணங்களால் விஜய்யை நிராகரித்தார்  என்ற ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த போதிலும், ரஜினியின் நடிப்பைப் பற்றி பாரதிராஜா வெளிப்படையாகப் பேசிய சில கருத்துகளும் தற்போது நினைவுகூரப்பட்டு வருகின்றன. இது குறித்து ஒருமுறை பேசியிருந்த ரஜினிகாந்த், “இயக்குநர் பாரதிராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பிடிக்கும்; ஆனால் என்னுடைய நடிப்பு அவருக்குப் பிடிக்காது” என்று ஒரு மேடையில் எதார்த்தமாகப் பகிர்ந்துகொண்டார். திரையுலக ஜாம்பவான்களான ரஜினி, விஜய் ஆகியோருடன் பாரதிராஜாவுக்கு இருந்த இத்தகைய நேர்மையான கலை ரீதியான விமர்சனங்களும், நட்பும் தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் அழியாத நினைவுகளாக நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.