திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, இரண்டு மனைவிகளையும் தன்னுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திலேயே அடம் பிடித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்கு, சுமதி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ள நிலையில், அவர் திடீரென மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சடையாண்டி தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து, நாகேஷ்வரி (21) என்ற பெண்ணை ரகசியமாக 2-வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது அம்பலமானது.
இதையடுத்து மூவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரித்த போது, “என் முதல் பொண்டாட்டி எப்ப பாத்தாலும் சண்டை போடுறா, அதான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன்; எனக்கு ரெண்டு பேரையும் பிடிச்சிருக்கு, ரெண்டு மனைவிகளையும் என்னோடவே அனுப்பி வைங்க, நான் ஒன்னா வச்சு பாத்துக்குறேன்” என்று சடையாண்டி அசால்ட்டாகக் கூற, அதைக் கேட்டு போலீசார் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
2-வது மனைவி நாகேஷ்வரியும் சடையாண்டியோடு போக வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்க, முதல் மனைவி சுமதியோ தனது 2 பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கணவரை தன்னுடன் அனுப்புமாறு கண்ணீரோடு மன்றாடியுள்ளார். இறுதியில், முதல் மனைவி இருக்கும் போது இன்னொரு கல்யாணம் செய்வது சட்டப்படி குற்றம் என சடையாண்டியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய போலீசார், ஜெயிலுக்குப் போக நேரிடும் என எச்சரித்து, 2-வது பெண்ணை அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பியதோடு, சடையாண்டிக்கு புத்திமதி சொல்லி முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்த்து அனுப்பி வைத்தனர்.
