கிராமத்தின் எல்லைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ராகுல் (28) இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தின் அருகே இருந்து சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி ஒன்றும், பயன்படுத்தப்பட்ட தோட்டாவின் வெற்று உருளையும் (கார்ட்ரிட்ஜ்) மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள தகவல்கள் அனைவரையும் உலுக்கும் வகையில் அமைந்துள்ளன. உயிரிழந்த இளைஞரிடம் முந்தைய நாள்தான் குடும்பத்தினரும் உறவினர்களும் திருமணத்தைப் பற்றிப் பேசியுள்ளனர். அதற்கு அந்த இளைஞரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மனப்பூர்வமாகத் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். திருமணம் கைகூடிவிட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இருந்த நிலையில், அடுத்த நாளே அவர் பிணமாக மீட்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அந்த இளைஞர் எதற்காக வயல்வெளிக்குச் சென்றார், அங்கு அவருக்கு என்ன நடந்தது என்பது புரியாத புதிராக உள்ளது. அவர் தானாகவே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரைத் திட்டமிட்டு அங்கு வரவழைத்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை போலச் சித்தரிக்கத் துப்பாக்கியை அருகில் போட்டுச் சென்றார்களா என்ற கோணத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

தற்போது உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றியுள்ள போலிஸார், அதனை உடற்கூறாய்வு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் கிடைத்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டா ஆகியவற்றைக் கைப்பற்றி தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இளைஞரின் செல்போன் அழைப்புகள் மற்றும் இறுதி நேரத்தில் அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற தகவல்களின் அடிப்படையில் போலிஸார் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.