துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் திமுகவின் உட்கட்சி நிலைமை குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி CTR நிர்மல் குமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் தகுதி குறித்து அவர் ஆற்றிய காரசாரமான உரை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலில் உதயநிதி ஸ்டாலினுக்கு ‘Gen-Z’ என்றால் என்னவென்றே புரிய வைக்க வேண்டும். அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் ‘Gen-Z DMK’ என்று டி-சர்ட் போட்டுக்கொண்டு உட்கார வைத்திருக்கிறார்கள். எதுவுமே புரியாமல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
திமுகவில் 200 ரூபாய், 300 ரூபாய் கொடுத்து யாரையெல்லாம் எங்கெங்கே உட்கார வைத்திருக்கிறார்கள் என்பது மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதையெல்லாம் விட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்ய வேண்டும். உதயநிதிக்கு முதல்ல ஒரு சுய பரிசோதனை தேவை” என்று கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி குறித்துப் பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தான் ஒரு தலைவரா இல்லையா என்பதே கடைசி வரை தெரியவில்லை. அதனால்தான் தனது ஆட்சியைத் தனது அரசு என்று சொல்லாமல், ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று சொல்லி மழுப்பிவிட்டுச் சென்றுவிட்டார். அதே குழப்பமும் சந்தேகமும் தான் இப்போது உதயநிதிக்கும் இருக்கிறது.
அதனால்தான் ‘Gen-Z DMK’ என்று ஏதோ ஒன்றை போட்டுக்கொண்டு அலைகிறார். உதயநிதிக்கு நாம் ஒரு நல்ல அட்வைஸ் தருகிறோம்; அவர் முதலில் சுய பரிசோதனை செய்ய வேண்டும்” என்றார். மேலும் திமுகவிற்கு ஒரு அதிரடி சவாலை முன்வைத்த அவர், “திமுகவில் உள்ள நிர்வாகிகளை வழிநடத்த உதயநிதிக்குத் தகுதி இருக்கிறதா? என்று கட்சிக்குள் ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படியாவது தன் தகுதி என்னவென்று அவர் தெரிந்துகொள்ளட்டும்.
உதயநிதியையே வெளுத்து வாங்கிய CTR நிர்மல் குமார்!🔥😂 pic.twitter.com/AKeIlwF9Lz
— ❤️🔥 (@VigneshRb11) July 26, 2026
இன்னும் ஒரு படி மேலே போய், அண்ணா ஆரம்பித்த திமுகவை வழிநடத்த உதயநிதிக்கு அதிக தகுதி இருக்கிறதா அல்லது திருமதி கனிமொழி அவர்களுக்கு அதிக தகுதி இருக்கிறதா என்று இரண்டு பேரையும் வைத்து திமுகவிற்குள் ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதாவது உதயநிதியின் உண்மையான தகுதி என்னவென்று அவருக்கும் அவர் கட்சிக்கும் தெரியும்” என்று மிகக் காட்டமாக உதயநிதி ஸ்டாலினை வருத்தெடுத்துள்ளார்.
