இயக்குநர் பா.ரஞ்சித் சமீபகாலமாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆளும் தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராகப் பேசி வருவதுடன், திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். இந்நிலையில், தவெக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்கூறி வரும் பா.ரஞ்சித்தை விமர்சித்து, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தேசிய சமூக ஆர்வலர் ஒருவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். இந்த ஆவேசமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

​அந்த வீடியோவில் காரசாரமாகப் பேசிய அவர், “அண்ணன் அண்ணன் என்று கூறி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் பின்னால் சுற்றினாயே… அவனை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றார்களே, அப்போது எங்கே சென்றாய்? அவருடைய மனைவி இன்று கையில் ஒரு கைக்குழந்தையுடன் ஆதரவற்று நிற்கிறாரே, அதைப் பார்க்கும்போதாவது உனக்கு மனசாட்சி உறுத்தவில்லையா? உன் முன்னால் ஒரு மைக்கும், நீ சொல்வதையெல்லாம் கேட்பதற்கு ஒரு கூட்டமும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவாயா?” என்று மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

​தொடர்ந்து நீட் தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய அவர், “நீட் தேர்வைப் பற்றிப் பேச வேண்டுமானால், அதை யார் கொண்டு வந்தது? யார் ஆதரவு அளித்தது? என்பதைப் பற்றிப் பேசுங்கள். உண்மையைச் சொன்னால் மக்கள் திமுகவை நோக்கித்தான் காரித் துப்புவார்கள். நீட் தேர்வுக்குக் கையெழுத்துப் போட்டவனை செருப்பைக் கழற்றி அடித்திருக்க வேண்டாமா?” என்று கொந்தளித்தார்.

​மேலும், ஆளும் தவெக அரசை விமர்சிக்கும் பா.ரஞ்சித்தின் அரசியல் நிலைப்பாட்டைச் சாடிய அவர், “அம்பேத்கர் சிலையைத் திறக்கவில்லை என்று கூறி ஆளும் தவெக அரசு மீது பாய்கிறீர்களே, திமுககாரனுக்குப் போய் வால் பிடித்துப் பேசுகிறீர்களே… கடந்த 6 வருடங்களாக இந்த விஷயத்தில் ஏன் பேசவில்லை? 6 வருஷமாகத் திறக்காத வாய், இந்த 60 நாட்களில் எப்படி திடீரென்று திறந்தது? திடீரென பேச்சு வந்துவிட்டதா?

அன்று ஒருநாள் அண்ணன் திருமாவளவனால் கொடியேற்ற முடியவில்லை என்று கதறினாரே, அன்று எங்கே போனீர்கள்? வேங்கைவயல் சம்பவத்தின் போது எங்கே சென்றீர்கள்? அந்த நீர்த் தொட்டியில் இருக்கும் தண்ணீரைக் குடித்து காட்டியிருக்க வேண்டியதுதானே?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி பா.ரஞ்சித்தை கடுமையாகச் சாடியுள்ளார்.