இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு என்பது எந்த அளவிற்கு அலட்சியப்படுத்தப்படுகிறது என்பதற்குச் சான்றாக, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சோயா சாப் தயாரிக்கும் கூடம் ஒன்றில், சட்டையில்லாமல் இருக்கும் தொழிலாளி ஒருவர், அழுக்கு படிந்த தரை மீது சோயா சாப் மாவைக் கால்களாலும் உடலாலும் உருட்டித் தயார் செய்யும் அதிர்ச்சி காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. நாம் அன்றாடம் ஆசையாக வாங்கி உண்ணும் உணவுகள் எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகின்றன என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

சமீபகாலமாக உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிலையங்களில் நடக்கும் சுகாதாரக் கேடுகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருவது தொடர்கதையாகிவிட்டது.  அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள இந்த வீடியோவில், எந்தவித அடிப்படை சுகாதார விதிகளையும் பின்பற்றாமல், ஈக்கள் மொய்க்கும் அழுக்கான சூழலில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள், “இந்தியாவில் உணவுப் பாதுகாப்புத் துறை என்பது பெயருக்குத்தான் இருக்கிறதா? மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?” எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பித் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

மக்களின் உயிருடனும் ஆரோக்கியத்துடனும் சம்பந்தப்பட்ட உணவுத் துறையில் இதுபோன்ற சட்டவிரோத மற்றும் சுகாதாரமற்ற செயல்கள் நடப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி கூடங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு, வருகின்றன.

இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோரின் உரிமத்தை ரத்து செய்வதோடு கடுமையான தண்டனைகளையும் வழங்க வேண்டும். பொதுமக்கள் தாங்கள் உண்ணும் உணவு சுத்தமான சூழலில் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

“>