மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை (PWD) குடியிருப்பில் வசித்து வந்த பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தொடக்கத்தில் இது சாதாரணத் தற்கொலை வழக்காகப் பார்க்கப்பட்ட போதிலும், தற்போது ஆர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் இந்த வழக்கின் போக்கையே தலைகீழாக மாற்றியுள்ளன. கணவர், மாமனார் மற்றும் மைத்துனன் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து ஆர்த்தியைக் கொலை செய்துவிட்டு, அதைத் தற்கொலை போலச் சித்தரிக்க முயன்றுள்ளதாக அவர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
ஆர்த்தியின் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனால், ஆண் குழந்தை வேண்டும் என்ற தீவிர ஆசையில் இருந்த கணவரின் குடும்பத்தினர், ஆர்த்தியின் கணவர் நிலேஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்திற்குத் தடையாக இருந்த ஆர்த்தியை வழியில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தவே இந்தச் சதியை அரங்கேற்றியுள்ளனர் என்று ஆர்த்தியின் தாயார் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், கணவர் நிலேஷ் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்திய உறவினர்கள், “சம்பவத்தன்று காலை 8 மணி அளவில் ஆர்த்தி 9 தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது, சுயநினைவை இழக்கும் நிலையில் உள்ள ஒருவரால் அடுத்த 3 மணி நேரத்தில் தானே சென்று தூக்கில் தொங்க முடியுமா?” என்று கேள்வி எழுப்புகின்றனர். முதலில் ஆர்த்திக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயக்கமடையச் செய்து, பின்னர் அவரைத் தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை நாடகமாடியுள்ளனர் என்பது அவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
தற்போது ஆர்த்தியின் உடலைக் கைப்பற்றியுள்ள காவல் துறையினர், உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உடற்கூறாய்வின் முதற்கட்ட அறிக்கை, தடயவியல் (FSL) சோதன முடிவுகள் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் மட்டுமே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது உறுதியாகும் எனப் போலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் சூழலில், ஒரு அரசு பெண் அதிகாரிக்கே நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
