கர்நாடக மாநிலம் பெங்களூரில், குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் ஒருவர், மற்றொரு ஓட்டுநர் மீது காரை ஏற்றிப் பாய முற்பட்டதுடன், அவரை காரின் முன்பக்க போனட்டில் ஏற்றி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சம்பவத்தன்று இரு வேறு வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு இடையே சாலையில் செல்லும்போது லேசான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஒருவர், அதிகளவில் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், எதிரில் நின்ற ஓட்டுநர் மீது போதை ஓட்டுநர் தனது காரை நேராக ஏற்றி மோத முயன்றுள்ளார்.
View this post on Instagram
அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற அந்த நபர், எதிர்பாராதவிதமாக காரின் முன்பக்க போனட் மீது விழுந்துள்ளார். இருப்பினும் காரை நிறுத்தாத போதை ஓட்டுநர், அந்த நபரை போனட்டிலேயே உட்கார வைத்தபடி சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்குத் தொடர்ந்து காரை அதிவேகமாக இயக்கியுள்ளார். காரைப் பிடித்துக் கொண்டு உயிருக்குப் போராடியபடி அந்த நபர் அலறிய அலறல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
காரை ஏற்றி அவரைக் கொல்ல முயன்றும் அது முடியாததால், இவ்வாறு போனட்டில் வைத்து இழுத்துச் சென்று அபாயகரமான முறையில் காரை ஓட்டியது அங்கிருந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், வைரல் வீடியோவின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
