செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில், மது போதையில் 94 வயதான சொந்த பாட்டியை பேரன் அடித்துக் கொலை செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது முதிய தாயார் சரோஜா, வயது முதிர்வு காரணமாக அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொண்டு புலம்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று வீட்டின் வாசலில் கட்டிலில் படுத்திருந்த சரோஜாவைப் பார்க்க அவரது 26 வயது பேரன் மகேஷ் என்பவர் முழு மது போதையில் வந்துள்ளார்.

அப்போது பாட்டி சரோஜா வழக்கம் போல தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்த மகேஷ், ஆத்திரமடைந்து “ஏன் எப்போதும் புலம்பிக்கொண்டே இருக்கிறாய்?” என்று கேட்டு அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த பயங்கரமான அடியில் நிலைதடுமாறிய சரோஜா கட்டிலிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சரோஜாவின் இளைய மகன் ராஜி மற்றும் உறவினரான கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில், சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் மது போதையில் பாட்டியைத் தாக்கியதை மகேஷ் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்துள்ளனர்.