உத்திரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் ஜான்சி சிர்கான் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வரும் நிலையில், அவரது சகோதரிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தன்னுடன் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ரவிகாந்த் கோஸ்சுவாமி மற்றும் டிக்ஷாந்த் ஆகியோரை அந்தப் பெண் அழைத்துள்ளார்.

அதன்படி திருமணத்திற்கு வந்த அவர்கள் திருமணம் முடிந்த பிறகு, கான்ஸ்டபிளாக பணியாற்றும் பெண்ணை லஷ்மி நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் முன்பதிவு செய்த அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த பெண்ணுக்கு போதை மருந்து கலந்த பானம் கொடுத்த நிலையில் அந்தப் பெண் மயக்கமடைந்தார். அதன் பின் இன்ஸ்பெக்டர் ரவிகாந்த் மற்றும் டிக்ஷாந்த் ஆகியோர் அந்த பெண்ணிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை மேற்கொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மயக்கத்திலிருந்து எழுந்த பெண்ணிடம் நிர்வாண வீடியோவை காட்டி “வெளியில் சொன்னால் இணையத்தில் பதிவிடுவேன். குடும்பத்தினரை கொன்று விடுவேன்” என்று பயமுறுத்தியுள்ளனர். அதன் பின் தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து அடிக்கடி அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் மதுராவின் ஜமுனாபர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரவிகாந்த் மற்றும் டிக்ஷாந்த் ஆகியோர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல் துறையினர் கூட்டு பாலியல் வன்கொடுமை, அச்சுறுத்தல், போதை மருந்து கொடுத்து பாலியல் தாக்குதல், வீடியோ மூலம் மிரட்டுதல் போன்ற பல பிரிவுகளின் கீழ் அவர்கள் இருவரும் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்து மாநில காவல்துறை தலைமையகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும் ஒரு பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ள நிலையில், காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரிக்கு நடந்த கொடூரமான சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.