முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் 23 வயது இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் தனது அறிமுக போட்டியிலேயே அசாத்திய பந்துவீச்சை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

குறிப்பாக, தனது முதல் சர்வதேச போட்டியில் களம் கண்ட மானவ் சுதர், 22 ஓவர்கள் வீசி, அதில் 10 ஓவர்களை மெய்டனாக மாற்றி, வெறும் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளி ஆப்கானிஸ்தானை 152 ரன்களுக்கு சுருட்டினார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அவர், மூன்றாம் நாள் ஆட்டத்தில் மீதமுள்ள விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு இமாலய முன்னிலையை பெற்றுத் தந்துள்ளார்.

இந்த அசுர செயல்பாட்டின் மூலம், டெஸ்ட் அறிமுக போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 6 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேல் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை 38 ஆண்டுகளுக்குப் பிறகு மானவ் சுதர் நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1988-ம் ஆண்டு சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான நரேந்திர ஹிர்வானி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

இதன் மூலம் நரேந்திர ஹிர்வானி, ரவிச்சந்திரன் அஸ்வின், திலீப் தோஷி, சையத் ஆபித் அலி ஆகிய புகழ்பெற்ற இந்திய பந்துவீச்சாளர்களின் பிரத்யேக பட்டியலில் சுதர் இணைந்துள்ளார். மேலும், அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய 10-வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் சர்வதேச கிரிக்கெட் பயணம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் வேளையில், இந்திய அணிக்கு தரமான இடதுகை சுழற்பந்து வீச்சாளராக மானவ் சுதர் உருவெடுத்துள்ளது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.