அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு, இந்த அணியில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

மேலும், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பிரின்ஸ் யாதவ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவும் இந்த தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்த அணியில் வருண் சக்கரவர்த்தி, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், முகமது சிராஜ், திலக் வர்மா, அக்சர் படேல் மற்றும் சிவம் துபே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

 

இதற்கிடையில், காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஹர்ஷித் ராணா உள்நாட்டு போட்டிகளில் விளையாடி தனது தகுதியை நிரூபிக்காமலேயே நேரடியாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய வீரர் சதாகோபன் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கரின் இந்த முடிவை விமர்சித்துள்ள அவர், “முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஹர்ஷித் ராணா ஒரு உள்நாட்டுப் போட்டியில் கூட விளையாடவில்லை.

அவரை எப்படி தேர்வு செய்தீர்கள்? ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களாக இருந்தாலும், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி போன்ற வீரர்களாக இருந்தாலும், காயத்தில் இருந்து மீண்ட பிறகு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தங்களை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் என்று பிசிசிஐ நிர்வாகம் கூறி வந்தது. ஆனால், ஹர்ஷித் ராணாவுக்கு மட்டும் இந்த விதிவிலக்கு எப்படி? இதை பார்க்கும் போது முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களின் மனதில் என்ன ஓடும்?” என்று பிசிசிஐ-யின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக சாடியுள்ளார். இந்த சர்ச்சை தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.