முல்லன்பூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மைதானத்திலேயே தனது கடும் கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சுப்மன் கில் (126 ரன்கள்) மற்றும் கே.எல். ராகுல் (100 ரன்கள்) ஆகியோரின் அதிரடி சதங்களால் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதாரின் சுழலில் சிக்கி 152 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய மானவ் சுதார் 6 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் அள்ளினர். இதனால் 412 ரன்கள் பின்தங்கிய நிலையில், பாலோ ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் சிம்மசொப்பனமாக விளங்கினர்.

 

ஆப்கான் அணியின் 2-வது இன்னிங்ஸின் போது, காயம் காரணமாக ஷராபுதீன் அஷ்ரப்பால் ரன் ஓட முடியாமல் போனது. இதனால் அவருடன் களத்தில் இருந்த ரஹ்மத் ஷாவும் பவுண்டரிகள் அடிக்காமலும், ரன் எடுக்க முற்படாமலும் பந்துகளைத் தடுத்து ஆடுவதிலேயே முழு கவனம் செலுத்தினர். இந்த மந்தமான ஆட்டத்தைக் கண்டு பொறுமையிழந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ரஹ்மத் ஷாவை நோக்கிச் சென்று கையை நீட்டி தனது கடும் அதிருப்தியை மைதானத்திலேயே வெளிப்படுத்தினார்.

சிராஜின் இந்த ஆக்ரோஷமான செயலுக்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்களான கிரேம் ஸ்வான் மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்னும் 250 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில், ரன் எடுக்காமல் பந்தைத் தடுத்துக் கொண்டே இருந்தால் எந்தப் பந்துவீச்சாளருக்கும் கோபம் வருவது நியாயம் தான் என்று அவர்கள் வர்ணனையின் போது குறிப்பிட்டனர். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதை அடுத்து, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.