சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கான சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தரப்பில் கடந்த சில நாட்களாகக் கடுமையான குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்த வண்ணம் இருந்தன. இந்தத் திடீர் வரி உயர்வால் சொத்து உரிமையாளர்களும், சென்னைவாசிகளும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

​இருப்பினும், சென்னையில் புதிய சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. கட்டிடங்களின் பயன்பாட்டு மாற்றம், கூடுதல் பரப்பளவு அளவீடு அல்லது மதிப்பீட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே சிலருக்கு வரிக்க தொகையில் வேறுபாடு தெரிந்திருக்கலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

​இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள் மற்றும் சொத்து வரி மதிப்பீடு தொடர்பான ஆட்சேபனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதற்காகச் சென்னை மண்டல வட்டார துணை ஆணையர் அலுவலகங்களில் இன்று சிறப்பு முகாம்கள் பிரத்யேகமாக நடத்தப்படுகின்றன.

​இந்தச் சிறப்பு முகாம்களில் சொத்து உரிமையாளர்கள் நேரில் சென்று, தங்களது சொத்து வரி மதிப்பீடு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஆட்சேபனைகளை மண்டல துணை ஆணையரிடம் நேரடியாகத் தெரிவித்துத் திருத்தங்களை மேற்கொள்ளலாம். பொதுமக்கள் தங்களது புகார்களுக்கு உரிய தீர்வு பெற இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.