சாட் என்றாலே காரம், புளிப்பு, மொறுமொறுப்பு எனப் பல சுவைகள் நிறைந்த உணவாகும். ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், புரதச் சத்தை அதிகரிக்க விரும்புபவர்களும் எண்ணெயில் வறுத்த பொருட்கள் மற்றும் அதிக இனிப்புச் சட்னி கொண்ட வழக்கமான சாட் வகைகளைச் சாப்பிடத் தயங்குவார்கள். இதற்கு மாற்றாக, வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய ஆரோக்கியமான சைவ சாட் வகை தற்போது பிரபலமாகி வருகிறது.
சோளம், குறைந்த கொழுப்பு கொண்ட பனீர், காய்கறிகள், மக்கானா மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை இணைத்து இந்தச் சாட் தயாரிக்கப்படுகிறது. ஒரு வேளை உணவிற்குச் சுமார் 330 முதல் 350 கலோரிகள் கொண்ட இதில், 24 முதல் 26 கிராம் வரை புரதச் சத்தும், 6 முதல் 7 கிராம் நார்ச்சத்தும் கிடைக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், சைவ உணவை விரும்புபவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த புரத உணவாகும்.
செய்முறை:
100 கிராம் இனிப்புச் சோளத்தை ஆவியில் வேகவைத்து ஆறவிட வேண்டும். 15 கிராம் மக்கானாவை லேசாக வறுத்து மொறுமொறுப்பாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 100 கிராம் குறைந்த கொழுப்பு பனீரைச் சிறிய துண்டுகளாக்கி, நறுக்கிய வெள்ளரிக்காய் (75 கிராம்), வெங்காயம் (40 கிராம்), வறுத்த மக்கானா மற்றும் 10 கிராம் வேர்க்கடலையுடன் சேர்க்க வேண்டும்.
இதனுடன் சிறிதளவு உப்பு, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா, மிளகுத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும். இறுதியாகக் குறைந்த அளவில் புதினா சட்னி மற்றும் புளி சட்னி கலந்து, கொத்தமல்லித் தழை தூவினால் சுவையான ஆரோக்கியச் சாட் தயார்.
அன்றாட சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இந்தச் சத்தான உணவைச் செய்துவிடலாம். ஆரோக்கியமான உணவு என்றால் சுவையற்றது என்ற எண்ணத்தை மாற்றி, சுவையையும் ஊட்டச்சத்தையும் ஒரே நேரத்தில் வழங்கும் இந்தச் சாட், மாலை நேரச் சிற்றுண்டிக்கும் உடற்பயிற்சிக்குப் பிந்தைய உணவுக்கும் ஏற்ற நல்ல தேர்வாகும்.
