ஐபிஎல் தொடரில் மகத்தான சாதனைகளுக்குச் சொந்தமான மும்பை இந்தியன்ஸ் பிரான்சைசி, உலகெங்கிலும் உள்ள பல்வேறு டி20 மற்றும் உரிமையாளர் கிரிக்கெட் லீக்குகளிலும் கோப்பைகளைக் குவித்து வந்தது. ஆனால், கடந்த சில காலமாக இந்த அணியின் வெற்றிப்பயணம் தடைபட்டுள்ள நிலையில், தற்போது இங்கிலாந்தின் ‘தி ஹண்டரண்ட் தொடரிலும் அந்த அணிக்கு மோசமான தோல்வி முகம் ஏற்பட்டுள்ளது.
அம்பானி குடும்பத்திற்குச் சொந்தமான மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், கடந்த ஆண்டு இங்கிலாந்தின் ‘தி ஹண்டரண்ட் ‘ தொடரில் இடம்பெற்றிருந்த ‘ஓவல் இன்வின்சிபிள்ஸ்’ அணியின் பெரும்பான்மை பங்குகளைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, தங்களது பிராண்ட் அடையாளத்தைத் தொடரும் வகையில் அந்த அணியின் பெயர் ‘எம்ஐ லண்டன்’ என்று மாற்றப்பட்டது. ஆனால், பெயர் மாற்றம் பெற்றதுமே அந்த அணியின் ராசியும் தலைகீழாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.
இந்தத் தொடரின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், கடந்த 2021ஆம் ஆண்டுத் தொடங்கியதிலிருந்து கடந்த ஐந்து சீசன்களாக இந்த ஃபிரான்சைசி அசுர பலத்துடன் வலம் வந்தது. குறிப்பாக, மகளிர் பிரிவில் தொடர்ச்சியாக முதல் இரண்டு சீசன்களிலும், ஆண்கள் பிரிவில் கடந்த மூன்று சீசன்களாகவும் எனத் தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்தது. ஆனால், நடப்புத் தொடரில் எம்ஐ லண்டன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு களமிறங்கிய பிறகு, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலுமே அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை; ஏன், பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூடத் தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற லீக் சுற்றுடைய கடைசிப் போட்டிகளில், ஆண்கள் பிரிவில் எம்ஐ லண்டன் அணி பீனிக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கி நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் எலிமினேட்டர் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தது. மறுபுறம், மகளிர் பிரிவில் தொடர்ந்து தடுமாறி வந்த எம்ஐ லண்டன் அணி, தனது கடைசிப் போட்டியிலும் பர்மிங்கதமிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த அந்த அணி, 6 புள்ளிகளுடன் 8 அணிகள் கொண்ட பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து அதிர்ச்சியளித்தது.
ஐபிஎல் தொடரில் கடந்த ஆறு சீசன்களாகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் மும்பை அணிக்கு, இந்த ஆண்டு டபிள்யூபிஎல் (WPL) மற்றும் எம்எல்சி (MLC) தொடர்களிலும் பின்னடைவே ஏற்பட்டது. தற்போது இங்கிலாந்து மண்ணிலும் வெற்றிக் கொடி நாட்டிய சரித்திரம் கொண்ட ஒரு அணி கோப்பையின்றி வெளியேறியுள்ளது அதன் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
