சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாமல் சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட நபர், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி (28) என்பதும், அவர் காதல் விவகாரத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதும் போலீசாரின் அதிரடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த 5-ஆம் தேதி பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் வீசப்பட்டிருந்த அந்த சூட்கேஸை மீட்டு, ரயில்வே போலீஸார் மற்றும் சென்னை மாநகர காவல் துறையினர் இணைந்து 15 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகப் புலனாய்வு செய்து வந்தனர்.
ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தேனாம்பேட்டை பகுதியிலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் அந்த சூட்கேஸைக் கொண்டு வந்து வீசிச் சென்றது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் காப்பாளராகப் பணிபுரிந்து வரும் அஸ்ஸாமைச் சேர்ந்த நஹிமா கருன் என்ற அஃப்ரின் (25) மற்றும் அவரது தற்போதைய காதலரான உசேன் அமீர் ஆகிய இருவருமே இந்த கொடூர கொலையைச் செய்தது தெரியவந்தது.
கொல்லப்பட்ட அமீர் அலி, நஹிமா கருனின் முன்னாள் காதலர் ஆவார். சென்னைக்கு வந்த நஹிமாவிற்கு உணவு விடுதி ஊழியர் உசேன் அமீருடன் புதிய காதல் மலர்ந்த நிலையில், இதனை அறிந்த முன்னாள் காதலர் அமீர் அலி அவருடன் போனில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நஹிமாவும் அவரது தற்போதைய காதலன் உசேனும் சேர்ந்து, அமீர் அலியை அஸ்ஸாமில் இருந்து சென்னைக்கு வரவழைத்துத் தேனாம்பேட்டையில் வைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், உடலை மறைப்பதற்காக அவரது தலை, கைகள் மற்றும் கால்களைத் துண்டு துண்டாக வெட்டி, உடற்பகுதியை மட்டும் சூட்கேஸில் அடைத்துப் பெரம்பூரில் வீசியுள்ளனர். மேலும், அமீர் அலி கொலை செய்யப்படுவதை நஹிமா தனது கைப்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்த அதிர்ச்சி தகவலையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில், செங்கல்பட்டு ஏரியில் வீசப்பட்டிருந்த அமீர் அலியின் துண்டிக்கப்பட்ட தலையை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். இந்த பயங்கர கொலை வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
