சென்னை ஏழுகிணறு பகுதியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு தனிப்பட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் மேல் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்களை பிடித்து விசாரித்த நிலையில் அவர்களிடமிருந்த பையை சோதனை செய்தனர். அதில் உயர்ரக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் சினிமா துறையில் உதவி டைரக்டராக வேலை செய்து வரும் ஸ்ரீ பிரேம்குமார் (32) , அலெக்ஸ் சந்தோஷ் (34) மற்றும்  ராஜன் (36) என்பது  தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 750 கிராம் ஓ ஜி கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்த நிலையில் அவற்றின் மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து உதவி டைரக்டரான பிரேம்குமாரின் நெருங்கிய நண்பர் மலேசியாவில் வசித்து வரும் நிலையில் அங்கிருந்து உயரக கஞ்சாவை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதை பிரேம்குமார் அப்பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்களுடன் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் தேடி தரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.