கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற பிள்ளைகளையும், தன்னையே நம்பி வந்த கணவனையும் மறந்து கொடூரச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், விவசாயி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம், காவல்துறையின் தீவிர விசாரணையில் மனைவியே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரக் கொலை என்பது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முகேஷ் ராவத் (33) என்பவர், வியாழக்கிழமை காலை தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்ட குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரது நிலையில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அவரை அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஆரம்பம் முதலே முகேஷின் மனைவி விமலா தேவி (32) மற்றும் அவரது கள்ளக்காதலனான சுரங்கத் தொழில் அதிபர் கோபால் சிங் மீது முகேஷின் சித்தப்பா ராம அவதார் சந்தேகம் எழுப்பினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விமலாவுக்கும் கோபால் சிங்கிற்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததும், அதுபற்றி முகேஷுக்குத் தெரியவந்து வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும், சம்பவத்திற்கு 8 நாட்களுக்கு முன்பு மனைவியும் கோபால் சிங்கும் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை முகேஷ் நேரில் பார்த்து கண்டித்ததால், கோபால் சிங் அவரை ஆத்திரத்தில் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, சம்பவத்தன்று இரவு தங்களின் 5 குழந்தைகளையும் ஒரு தனி அறையில் வைத்துப் பூட்டிய விமலா, தன் கள்ளக்காதலன் கோபால் சிங் மற்றும் அவரது கூட்டாளியுடன் சேர்ந்து கணவன் முகேஷின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அதனைத் தற்கொலை அல்லது இயல்பான மரணம் எனக் காட்டுவதற்காக முகேஷின் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தையும் ஊற்றி நாடகமாடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீசாங்கன் காவல் நிலைய ஆய்வாளர் பாருல் யாதவ் தலைமையிலான காவல்துறையினர், கொடூர மனைவி விமலா தேவி, அவரது கள்ளக்காதலன் கோபால் சிங் மற்றும் உடந்தையாக இருந்த மற்றொரு நபர் என 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
