பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம், கர்பூரிகிராம் காவல் எல்லைக்குட்பட்ட சிங்கியா குர்த் கிராமத்தில் மிகவும் விசித்திரமானதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
காகா மாவட்டத்தைச் சேர்ந்த அனுராதா குமாரி என்பவருக்கும், அதே பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில் பணியாற்றும் மனோகர் குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்தத் தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அனுராதாவுக்கு ஏற்கனவே எட்டிலிருந்து பத்து ஆண்டுகளாகப் பன்னாலால் யாதவ் என்பவருடன் பழக்கம் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கும் பன்னாலால், சம்பவத்தன்று நள்ளிரவில் ரகசியமாக அனுராதாவைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக இருப்பதை அக்கம் பக்கத்து கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்து விசாரித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஊரில் உடனடியாகப் பஞ்சாயத்து கூட்டப்பட்டு பல மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கணவர் மனோகர் குமாரின் முழு சம்மதத்தைப் பெற்று, கிராம மக்களின் முன்னிலையில் அந்தப் பெண்ணுக்குத் தனது பழைய காதலனான பன்னாலால் யாதவுடன் ஊருக்கு நடுவே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விசித்திரத் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
