தென்கொரியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவம், தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தப் பெண் வசித்து வரும் குடியிருப்பின் பக்கத்து வீட்டில் உள்ள கொரிய நபர் ஒருவர், தனது வீட்டில் புதுப்பித்தல் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, அக்கம் பக்கத்தினருக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் காட்டிய நாகரிகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டைப் புதுப்பிக்கும் போது எழும் சத்தத்தால் பக்கத்து வீட்டினருக்குச் சிரமம் ஏற்படும் என்பதை உணர்ந்து, அவரே நேரில் வந்து அனுமதி கேட்டதோடு, சிறிய அன்பளிப்புப் பொட்டலத்தையும் வழங்கி மன்னிப்புக் கேட்டுள்ளார். கொரிய மக்களின் இந்த உயரிய நாகரிகமும், பிற மனிதர்களுக்குத் தரும் மரியாதையும் அந்த இந்தியப் பெண்ணைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக நமது ஊர்களில் வீட்டைப் புதுப்பிக்கும் போது அதிகாலையிலேயே தொடங்கும் சத்தமும் தூசியும் அக்கம் பக்கத்தினரின் நிம்மதியைக் கெட்பது வழக்கம். ஆனால், கொரியாவில் இதற்காகப் பின்பற்றப்படும் நடைமுறை முற்றிலும் வேறாக உள்ளது. அந்த நபர் வழங்கிய அன்பளிப்புப் பையில், பணி நடைபெறும் நாட்களில் ஏற்படும் சத்தத்திற்கு மன்னிக்கவும் என்ற குறிப்புடன், சில நொறுக்குத் தீனிகளும் வைக்கப்பட்டிருந்தன.
அதோடு “இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு நற்பழக்கமும் பிறர் நலன் மீதான அக்கறையும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று அந்தப் பெண் தனது சோஷியல் மீடியா பதிவில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் வெறும் ஒரு வீட்டின் புதுப்பித்தல் பணி தொடர்பானது மட்டுமல்ல, மனிதர்களுக்கு இடையேயான அடிப்படை நாகரிகத்தையும் பரஸ்பர மரியாதையையும் உணர்த்தும் ஒரு பாடமாகவே பார்க்கப்படுகிறது. பிறருக்குச் சின்ன தொந்தரவு நேர்ந்தாலும் அதற்கு வருந்தும் குணம், சமூகக் கட்டுப்பாடு ஆகியவை ஒரு நாட்டின் கலாச்சார உயர்வைச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் “நம்ம ஊருல பக்கத்து வீட்டுக்காரங்க சத்தம் போட்டா சண்டை தான் வரும், ஆனா இங்க இருக்கிற மரியாதையைப் பாருங்க” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைக் கண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். நாகரிகமான வாழ்வியல் முறைக்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
See this Instagram video by @travelandeatwith_passion https://t.co/bQoBqSRO6Y
“>
