தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சமீபகாலமாக விமர்சனங்களும் அதற்கு தரப்படும் பதிலடிகளும் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த லயோலா மணி, திரைப்பட இயக்குனர் அமீரை விமர்சித்துப் பேசியது மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியது. இதற்கு பதிலளித்த இயக்குனர் அமீர், 2018-ல் ‘சர்க்கார்’ படத்திற்கு பிரச்சனை வந்தபோது முதன்முதலில் ஆதரவாகக் குரல் கொடுத்தது நான்தான் என்று குறிப்பிட்டார்.

மேலும், லயோலா மணியைப் பார்த்து, “அப்போதெல்லாம் நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க, ஸ்கூல் படிச்சிட்டு இருந்தீங்களா இல்ல ஸ்கூலை கட் அடிச்சிட்டு இருந்தீங்களா?” என்று கடுமையாகச் சாடியிருந்தார். ​அமீரின் இந்த பேச்சு, தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமீரின் இந்த விமர்சனத்திற்குச் சரியான முறையில் ஆதாரத்தோடு பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த தவெகவினர், லயோலா மணியின் கடந்த கால செயல்பாடுகளைத் தேடிப்பிடித்து இணையத்தில் வெளியிடத் தொடங்கினர். அதன்படி, 2017-ஆம் ஆண்டு நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தைக் கைப்பற்றி, அதை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

​அந்த வீடியோவில், 2017-ஆம் ஆண்டு விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க வலியுறுத்தி இளைஞர்கள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, லயோலா மணியும் அதில் களத்தில் நின்று போராடியது தெளிவாகத் தெரிகிறது. அப்போது அவரைப் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

​இந்த பழைய வீடியோவையும் தற்போதைய நிகழ்வுகளையும் இணைத்து ஒரே வீடியோவாகத் தயாரித்து, அமீரின் கேள்விக்குச் சாட்டையடி பதிலடியாக இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதன் மூலம், “அமீர் குறிப்பிட்டது போல லயோலா மணி ஒன்றும் பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டுச் சுற்றியவர் அல்ல; சிறு வயதிலேயே சமூக அக்கறையோடு விவசாயிகளுக்காக வீதியில் இறங்கிப் போராடிச் சிறை சென்றவர்” என்பதைத் தவெகவினர் நிரூபித்துள்ளனர்.

​சினிமா சார்ந்த ஆதரவை விட, சமூகத்திற்கான போராட்டக் குரலே மேலானது என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ ஆதாரத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இரு தரப்பு விவாதத்தையும் மேலும் சூடாக்கியுள்ளது.