தமிழ்நாட்டில் திருவிழா காலங்களில் பக்தர்கள் அலகு குத்துவதும், முதுகில் கொக்கி போட்டு தேர் இழுப்பதும் காலங்காலமாகப் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளாகும். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இந்த அலகு குத்தும் வழிபாட்டு முறையைப் பற்றி ஒரு மேடையில் மிக உயர்த்திப் பேசியிருந்தார். “தமிழன் விழா காலங்களில் அலகு குத்துவதும், வேல் குத்துவதும் ஒரு வகையான வீரப் பயிற்சிதான்.

வேல் குத்தினால் எவ்வளவு வலிக்கும், வாள் குத்தினால் எவ்வளவு வலிக்கும் என்பதைச் சிறுவயதிலேயே தன் உடலுக்குப் பழக்கப்படுத்துகிறான் தமிழன். அவன் மறவன் என்பதாலும், போர்க்களத்தில் காயங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதாலும் செய்யப்பட்ட ஒரு அறிவியல் பூர்வமான நடவடிக்கை இது” என்று அலகு குத்துவதைப் பெருமிதத்தோடு சீமான் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வந்தது.

​ஆனால், தற்போது அதே சீமான் முற்றிலும் இதற்கு எதிராகவும், முரண்பாடாகவும் பேசிய மற்றொரு பழைய வீடியோவை இணைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில் சீமான், பக்தர்களைப் பார்த்து மிகவும் காட்டமாகப் பேசியுள்ளார். “என் அண்ணன் தம்பிகளே, ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாகப் போகிறீர்கள்?

அலகு குத்துபவர்கள் தாடைக்குக் கீழே உள்ள மெல்லிய சதையில் குத்துகிறீர்களே, உண்மையிலேயே நீங்கள் சிறந்த பக்தராக இருந்தால், அப்படியே ஒரு அங்குலம் மேலே ஏற்றி குத்துங்கள் பார்ப்போம்! அப்படிச் செய்தால் செத்துப் போய்விடுவோம் என்று உங்களுக்கே தெரியும்” என்று மிகவும் காரசாரமாக வினா எழுப்பியுள்ளார்.

​அத்துடன் நிற்காமல், தீமிதிக்கும் வழிபாட்டு முறையையும் கடுமையாக விமர்சித்த சீமான், “தீமிதிப்பதாகச் சொல்கிறீர்களே… நீங்கள் நிஜமான பக்திமானாக இருந்தால், அடுப்பு நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய கம்பியைக் குறுக்கே போடுகிறேன், அதன் மீது நடந்து போங்கள் பார்ப்போம்! அப்படி நீங்கள் நடந்து காட்டிவிட்டால், அன்றிலிருந்து நான் கருப்புச் சட்டை போடுவதையே விட்டுவிட்டு சாமி கும்பிட ஆரம்பித்து விடுகிறேன்” என்று ஆன்மீக நம்பிக்கைகளை பகிரங்கமாகச் சவால் விட்டுப் பேசிய காணொளியும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

​தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டை ஒரு மேடையில் “தமிழனின் அறிவியல் மற்றும் வீரத்தின் அடையாளம்” என்று பெருமையாகப் பேசிவிட்டு, மற்றொரு மேடையில் அதையே “காட்டுமிராண்டித்தனம்” என்று எள்ளி நகையாடிப் பேசியிருக்கும் சீமானின் இந்த இரட்டை நிலைப்பாடுதான் தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஒரே விஷயத்தைப் பற்றி இரு வேறு காலகட்டங்களில் முற்றிலும் முரணாகப் பேசியுள்ள சீமானின் இந்த வீடியோவை நெட்டிசன்களும், மாற்று அரசியல் கட்சியினரும் அதிகளவில் பகிர்ந்து, சீமானுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.