மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சான்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஹார்டுவேர் கடை நடத்தி வந்த 26 வயதான ராகேஷ் லோதி என்பவர் மர்ம நபர்களால் நடுரோட்டில் வைத்துத் தலை மற்றும் கை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 12-ஆம் தேதிதான் இவருக்குத் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே நிகழ்ந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று இரவு கடையை மூவிட்டு தனது மச்சானுடன் பைக்கில் வீட்டிற்குத் திரும்பியபோது, வழியை மறித்த கும்பல் வழி கேட்பது போல நடித்து திடீரெனத் தனது கையில் வைத்திருந்த வாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் ராகேஷின் கை தனியாக வெட்டி வீசப்பட்டதோடு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் கொலைச் சம்பவத்திற்கு முன்பு கடந்த சில மாதங்களாகவே ராகேஷ் மீது பலமுறை கொலை முயற்சிகள் நடந்துள்ளதாகவும், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது இந்த வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துத் தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
