குடும்பப் பிரச்சினைகளும் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் சில நேரங்களில் பேரழிவில் போய் முடிந்துவிடுகின்றன. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருக்கும் அவரது மனைவிக்கம் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறின் காரணமாக, கோபமடைந்த வெங்கடேஸ்வரலு தனது பெற்ற இரு பிஞ்சு குழந்தைகளான லிகிதா மற்றும் மோஷித் ஆகியோருக்குக் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 6 வயது சிறுமி லிகிதா பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடி வரும் 4 வயது சிறுவன் மோஷித்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகாத வார்த்தைகளால் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற வெங்கடேஸ்வரலு, மனைவியைப் பழிவாங்கும் நோக்கில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தனது குழந்தைகள் லிகிதா மற்றும் மோஷித்திற்கு ஆசையாக குளிர்பானம் வாங்கித் தருவது போல் நடித்து, அதில் ஆட்கொல்லி நஷத்தைக் கலந்து குடிக்கக் கொடுத்துள்ளார். அதை அறியாத பிஞ்சு குழந்தைகளும் தந்தை வெங்கடேஸ்வரலு கொடுத்த குளிர்பானத்தைக் குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் குழந்தைகள் இருவரும் அலறித் துடித்து மயங்கி விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுமி லிகிதா பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மோஷித்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக முயன்ற கொடூரத் தந்தை வெங்கடேஸ்வரலுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தகப்பனே தன் பிஞ்சுக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
