உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில்  அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலத் தகராறு  காரணமாக, ராதேஷ்யாம்  தனது 60 வயதான தந்தை பகவத் மிஸ்ராவை மண்வெட்டியால் கொடூரமாக வெட்டிக்கொன்றுள்ளார்.

புனேவில் வேலை பார்த்து வந்த ராதேஷ்யாம், 10 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியிருந்தார். அவருடைய மூத்த சகோதரரின் சிகிச்சைக்காக தந்தை நிலத்தை விற்றதை எதிர்த்து வந்த ராதேஷ்யாம், “இன்று என் தந்தையைக் கொன்றுவிடுவேன்” என்று கிராம மக்களுக்கு கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு, தனது தந்தை தூங்கிக்கொண்டிருந்தபோது, கழுத்தில் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

தாக்குதலின் போது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பகவத் மிஸ்ரா படுக்கையில் படுத்தபடியே வலியால் ரத்த வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்தார். அவரது கழுத்து வெட்டப்பட்டு ரத்தம் சிதறிய நிலையில் காணப்பட்டார். மகனின் செயலால் அதிர்ந்த குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மக்கள்  ராதேஷ்யாமை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொலையில் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியை எங்கிருந்து பெற்றார் என்பதும் தற்போது விசாரணையில் உள்ளது.

பகவத் மிஸ்ராவுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். 7 மாதங்களுக்கு முன்பு, அவருடைய மூத்த மகனுக்கு ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்காக, தந்தை தனது 60 டெசிமல் ( அரை ஏக்கர் நிலம்) நிலத்தில் இருந்து இரண்டரை டெசிமல் நிலத்தை விற்று சுமார் 7.5 லட்சம் ரூபாய் பெற்றார். அதில் ஒரு லட்சம் ரூபாயை ராதேஷ்யாம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தந்தை மீதான கோபத்தில், நிலத்தை விற்றது தவறு எனக் கருதி, தந்தையுடன் வாக்குவாதம் செய்து, அவரை கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தினர், ராதேஷ்யாமின் கொலை மிரட்டலை தீவீரமாக  எடுத்துக்கொள்ளாதது, தற்போது பெரும் மாபெரும் துயரத்திற்கு காரணமாகியுள்ளது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில், இறந்தவரின் மூத்த மகன் புகார் அளித்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, ராதேஷ்யாமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இதற்கு முன்னும் ஒரு பெண்ணை கடத்தி வீட்டில் வைத்திருந்ததாகவும், அந்த பெண் சில ஆண்டுகளில் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய கொலை சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.