மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மஹித்பூர் தாலுகாவில் உள்ள துல்சாபூர் கிராமத்தில், மனதை உலுக்கும் கொடூரக் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பூஜா என்ற தாய், தனது இரு குழந்தைகளை – 4 வயது உமா மற்றும் 8 மாதக் குழந்தை அனுஷ்காவை – கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொன்றிருக்கிறார். அந்த நேரத்தில் மூத்த மகள் மட்டும் வீட்டில் இல்லை, கணவரும் வெளியே சென்றிருந்தார். குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், பூஜா இந்த கொடூரமான செயலுக்கு தயாராகி, இருவரையும் பசுங்கொடி போல அழித்துவிட்டார்.
இரண்டு மகள்களையும் கொன்ற பிறகு, பூஜா நேரடியாக தனது மைத்துனியிடம் சென்று, “நான் என் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டேன்” என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதை கேட்ட மைத்துனி அதிர்ச்சியடைந்து உடனே போலீசாரிடம் புகார் அளித்தார்.
தகவல் கிடைத்ததும் மஹித்பூர் காவல்துறை சுனில் வர்கடே தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுமிகள் இறந்திருந்ததை உறுதி செய்தனர். குழந்தைகள் இருவரின் உடலிலும் காயங்கள், ரத்தக்கசிவு போன்ற அடையாளங்கள் இருந்ததாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் முன் உயிரிழந்திருந்ததாகவும் மருத்துவர் மைத்ரி மிஸ்ரா உறுதி செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுமிகள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஒரு குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் வடியும் நிலையில் இருந்ததாகவும், மற்றொரு குழந்தையின் உடலில் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் தெளிவாக இருந்ததாகவும் மருத்துவமனை தகவல் அளித்தது.
இந்த கொடூர சம்பவம் குறித்து பூஜாவின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். அவரின் செயல்பாடு மனநல சிக்கலின் அடிப்படையில் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தற்காலிகமாக வழக்கை மேற்பார்வை செய்கின்றனர்.
மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. ஒரு தாய் தனது குழந்தைகளை இப்படிக் கொடூரமாக கொன்றதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் தவிக்கின்றனர். “மனநலக் குறைபாடால் குழந்தைகளை கொல்லலாமா?” என்ற கேள்வியும் சமூகத்தில் எழுந்துள்ளது. போலீசார் தற்போது பூஜாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு, வழக்கில் மேலும் பிரிவுகள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
