உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், ஆதரவற்ற மற்றும் ஏழைச் சிறுமிகளுக்கு உதவி செய்வது போல நடித்து, அவர்களை ஏமாற்றி ராஜஸ்தானுக்குக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்திற்கு விற்று வந்த ஒரு அபாயகரமான கடத்தல் கும்பலை போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். லக்னோவை சேர்ந்த 12 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகள் கடந்த மே 12 அன்று திடீரென மாயமாகினர். இதுகுறித்து அவர்களது பாட்டி கொடுத்த புகாரின் பேரில், லக்னோ தெற்கு துணை போலீஸ் கமிஷனர் அமித் குமார் ஆனந்த் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சிறுமிகளின் செல்போன்கள் அணைக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அப்பகுதியில் இருந்த சுமார் 150 சிசிடிவி கேமரா பதிவுகளை சல்லடை போட்டுத் தேடி, மே 18 அன்று இரு சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல ஆண்டுகளாக பிரிந்திருக்கும் அவர்களது தாயுடன் சேர்த்து வைப்பதாகக் கூறி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதிக்குக் கடத்திச் சென்று விற்க முயன்றது அம்பலமானது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட பிரியா படேல் (23), அவரது கள்ளக்காதலன் அனுராக் யாதவ் (25), முகமது அக்தர் (32) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்த சிறுமிகளின் 17 வயது உறவினரான ஒரு சிறுவனையும் காவலில் எடுத்துள்ளனர். விசாரணையில், கைதான பிரியா படேல், ராஜஸ்தானைச் சேர்ந்த சோனம் என்ற பெண்ணுடன் சேர்ந்து இந்த மனிதக் கடத்தல் நெட்வொர்க்கை நடத்தி வந்தது தெரியவந்தது. பெற்றோர் இல்லாத அல்லது வறுமையில் வாடும் அழகான சிறுமிகளை குறிவைக்கும் இக்கும்பல், அவர்களுக்குப் புதிய ஆடைகள், ஊர் சுற்றிக் காட்டுவதாக ஆசைவார்த்தைகள் கூறி கடத்தி வந்துள்ளனர்.

பின்னர் சிறுமிகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் ராஜஸ்தானுக்கு அனுப்பி, ஒரு சிறுமிக்கு தலா ரூ.1.5 லட்சம் வரை பேரம் பேசி விற்றுள்ளனர். ஏற்கனவே ராய்பரேலியைச் சேர்ந்த இரு சகோதரிகளை இக்கும்பல் இதேபோல் விற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், ராஜஸ்தானில் தலைமறைவாக உள்ள சோனம் மற்றும் அவரது கணவர் பூபேந்திர சௌத்ரியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.