சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகன் இல்லத்தில், நகை திருட்டு சந்தேகத்தின் பேரில் பெண் ஊழியர்கள் சட்டவிரோதமாகச் சிறை வைக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
நடிகர் ரவி மோகனின் வீட்டில் பணியாற்றி வந்த பெண்கள் மற்றும் அவர்களுடன் வந்திருந்த ஒரு சிறுவன் என மூவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், பதற்றமடைந்த உறவினர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவசரப் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் நீலாங்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த நகைகள் களவு போனதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் நடிகர் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொதுமக்களோ அல்லது பிரபலங்களோ சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு யாரையும் வீட்டில் சிறை வைக்கக் கூடாது என்று எச்சரித்த காவல்துறையினர், நகை திருட்டு குறித்து உரிய முறையில் புகார் அளித்தால் சட்டப்படியான விசாரணை நடத்தப்படும் எனக் கூறி, அங்கு வைக்கப்பட்டிருந்த பெண்களையும் சிறுவனையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
