தனது இரண்டரை வயது பெண் குழந்தை குடும்பத்திற்கு ‘துரதிர்ஷ்டம்’ கொண்டு வந்ததாகக் கூறி, அக்குழந்தையைத் தேசிய நெடுஞ்சாலையில் வீசிச் சென்ற தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையில், குழந்தையை அவர்கள் விலைக்கு வாங்கிய அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி, ஒரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று தனியாக நின்றிருந்தது. இது பற்றி  கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இறங்கிய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட வாகனம் குழந்தையை இறக்கிவிட்டுச் சென்றது தெரியவந்தது. அந்த வாகனத்தை வைத்து தேடியபோது, போபாலில் பதுங்கியிருந்த குணா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி பிடிபட்டனர். முதலில் குழந்தையைத் தத்தெடுத்ததாகக் கூறிய தம்பதி, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதும் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

இந்தக் குழந்தை வந்த பிறகு எங்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இது குடும்பத்திற்கு ராசி இல்லாத குழந்தை என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்தக் குழந்தையை இந்தூரில் உள்ள ஒரு சட்டவிரோத கும்பலிடம் இருந்து 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக, குழந்தையைப் பராமரித்த செவிலித்தாய் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “குழந்தையை அந்தத் தம்பதி அடிக்கடி அடித்துக் கொடுமைப்படுத்தினர். எனக்கு வழங்க வேண்டிய 20,000 ரூபாய் சம்பளத்தையும் தராமல் ஏமாற்றிவிட்டனர்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் மூலம் மத்தியப் பிரதேசத்தில் இயங்கி வரும் பெரும் குழந்தை கடத்தல் கும்பல் அம்பலமாகியுள்ளது. ஏழைப் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளைப் பெற்று, சட்டவிரோதமாக விற்பனை செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்த சிலரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஏற்கனவே உத்திரபிரதேசத்தில் செவிலியர் ஒருவர் குழந்தையை 2.6 லட்சத்திற்கு விற்க முயன்று கைதான நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்திலும் இத்தகைய கும்பல் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்குழந்தையின் உண்மையான பெற்றோரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.