மனிதாபிமானமற்ற முறையில் காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக, ஒற்றை யானை ஒன்று ராட்சத ஜேசிபி (JCB) இயந்திரத்தை வழிமறித்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “வளர்ச்சி” என்ற பெயரில் இயற்கை அழிக்கப்படுவதற்கு அந்த யானை மௌனமாகத் தெரிவிக்கும் எதிர்ப்பு, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. X’ தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், காட்டை அழித்து நிலத்தைச் சீர் செய்ய வந்த ராட்சத ஜேசிபி இயந்திரத்தின் முன்னே, ஒரு பிரம்மாண்டமான யானை அசைவின்றி நிற்கிறது. இயந்திரம் முன்னேற முயன்றபோதும், தனது வீடான காட்டை விட்டு நகர மறுத்து அந்த யானை உறுதியுடன் நின்றது.

 

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான பகிர்வுகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்: அரசாங்கத்தை விட அந்த யானைக்குத்தான் ‘நிலையான வளர்ச்சி’  பற்றித் தெரிந்திருக்கிறது என ஒரு பயனர் விமர்சித்துள்ளார். தனது வீட்டைப் பாதுகாக்கப் போராடும் இந்த யானையை, அரசாங்கம் இப்போது ‘பயங்கரவாதி’ என்று அழைக்குமா? என மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஜேசிபி ஆபரேட்டர் இயந்திரத்தை நிறுத்தியிருக்க வேண்டும். யானைக்கோ அல்லது அங்கிருப்பவர்களுக்கோ விபத்து நேரிட்டால் யார் பொறுப்பு?” எனப் பலரும் கோபத்தைப் வெளிப்படுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது குறித்துக் கூறுகையில், “சாலை விரிவாக்கம், சுரங்கம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யானைகளின் வழித்தடங்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. குறுகிய கால லாபத்திற்காக இயற்கையை அழிப்பது, மனித-யானை மோதலை அதிகரிப்பதுடன், பருவநிலை மாற்றத்தையும் மோசமாக்கும்,” என எச்சரிக்கின்றனர்.

மேலும் இந்த வீடியோவின் இறுதியில், அந்த ஒற்றை யானை அதிகாரமிக்க இயந்திரங்களுக்கு எதிராகத் தனியாக நின்று தனது வீட்டிற்காகப் போராடும் காட்சி, “வளர்ச்சி என்ற பெயரில் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இயற்கையைத் தியாகம் செய்யப் போகிறோம்?” என்ற சங்கடமான கேள்வியை நம் முன்னே விட்டுச் செல்கிறது.