இந்தியாவில் வழக்கமாக இந்நேரம் தென்மேற்கு பருவமழை பிச்சுகிட்டு ஊற்ற வேண்டிய நிலையில், தற்போது நாட்டின் வானிலை நிலைமை மிகவும் மோசமாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஒரு அதிர்ச்சியான மற்றும் கவலையளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், இந்தியாவின் மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வானத்தில் வழக்கமாக இருக்க வேண்டிய அடர்ந்த மழை மேகங்களை இப்போது பார்க்கவே முடியாமல் வானம் வறண்டு காணப்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவின் ‘இன்சாட்-3டிஎஸ்’ (INSAT-3DSR) செயற்கைக்கோள் எடுத்த அதிநவீன புகைப்படங்களை ஆய்வு செய்த போது, இந்தியாவிற்கு மேல் முக்கால்வாசி இடங்களில் மழை மேகங்களே இல்லாமல் ஒரே வறட்சியாக, வெட்டவெளியாகத் தெரிவது விஞ்ஞானிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மழை மேகங்கள் நகரும் வேகம் மிகவும் மந்தமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து ஜூன் 26 ஆம் தேதி வரை கணக்கிட்டுப் பார்த்ததில், இந்தியா முழுவதும் சராசரியாக 45 சதவீதம் மழை மிகக் கொடூரமாகக் குறைந்து, மாபெரும் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் கிடையாது, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கக்கூடிய மிகப்பெரிய பற்றாக்குறையாகப் பார்க்கப்படுகிறது.
இப்படியே இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யாமல் மேகங்கள் தொடர்ந்து கலைந்து கொண்டே போனால், நாட்டின் விவசாயத் தொழில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டு உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகும். அதுமட்டுமில்லாமல், பொதுமக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு நாட்டின் முக்கிய அணைகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு போகும் விபரீத சூழல் உண்டாகும். அடுத்த சில நாட்களில் ஏதேனும் புதிய மழை மேகங்கள் திரளுகிறதா என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. செயற்கைக்கோள் படங்களுடன் வெளியான இந்த வறட்சி எச்சரிக்கை, தற்போது சோசியல் மீடியாக்கள் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
