இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா நகரில் உள்ள மழலையர் பள்ளி (Daycare) ஒன்றில், பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுமை இழைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 13 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதாவது ‘லிட்டில் அரேஷா’ (Little Aresha) என்ற மழலையர் பள்ளியில், குழந்தைகள் துன்புறுத்தப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், தற்போது அந்தப் பள்ளியை மூடி சீல் வைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பள்ளியின் அறக்கட்டளைத் தலைவர், மேலாளர் மற்றும் 11 பராமரிப்பாளர்கள் என மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளன. அந்த மையத்தில் இருந்த 103 குழந்தைகளில், 53 குழந்தைகள் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் இரண்டு வயதுக்குட்பட்டவர்கள். குழந்தைகள் உறங்கும் போது, அவர்கள் எழுந்துவிடாமல் இருக்க கை, கால்களைக் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரி இஹ்சான் கூறுகையில், “குழந்தைகள் மீதான வன்முறை ஒருபோதும் சகித்துக் கொள்ளப்படாது. பிஞ்சுக் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமை மிகப்பெரிய குற்றமாகும். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் இந்தோனேசியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய கொடூரமான குற்றங்களுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்ற அதிகபட்ச வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.