மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவரின் மனைவியை, ஆம்புலன்ஸை சுத்தம் செய்ய வைத்த ஊழியர்களின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரேலா கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான ராகுல் பர்மன் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை மாலை சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த அவர், முதலுதவிக்குப் பிறகு கட்னி மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார். வரும் வழியில் ராகுலுக்கு வாந்தி மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஆம்புலன்ஸின் ஜன்னல் மற்றும் உட்பகுதியில் கறை படிந்தது.
Shocking: In Katni, Madhya Pradesh, ambulance staff allegedly forced a woman to clean their vehicle after her critically injured husband vomited inside😡 pic.twitter.com/0Enqjl1b9O
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 27, 2026
ஆம்புலன்ஸ் மருத்துவமனையை வந்தடைந்ததும், அங்கிருந்த ஊழியர் மோகித் நாயக் என்பவர், ராகுலின் மனைவியை மிரட்டி, ஆம்புலன்ஸைச் சுத்தம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. தனது கணவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும், வேறு வழியின்றி அந்தப் பெண் தண்ணீரை ஊற்றி ஆம்புலன்ஸைச் சுத்தம் செய்துள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் யாரும் அந்தப் பெண்ணுக்கு உதவ முன்வராததுடன், மனிதாபிமானமின்றி வேடிக்கை பார்த்ததாக நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜ் சிங் தாக்கூர் முதலில் பேசுகையில், “ஆம்புலன்ஸில் இரத்தக் கறை பட்டிருக்கலாம், அதை அந்தப் பெண் சுத்தம் செய்திருப்பார்” என அலட்சியமாகப் பதிலளித்தார். ஆனால், வீடியோ ஆதாரங்களுடன் புகார்கள் வலுத்த நிலையில், “இத்தகைய செயலை ஏற்க முடியாது; ஆம்புலன்ஸ் மேலாளரிடம் விசாரித்து விரிவான விசாரணை நடத்தப்படும்” எனப் பின்னர் தெரிவித்தார். மேலும் காயமடைந்த ராகுல், மேல் சிகிச்சைக்காக ஜபல்பூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
