ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாக மாணவியை காணாமல் போனதால், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மாணவி திடீரென வீட்டிற்கு திரும்பிய பிறகு நடந்த சம்பவங்களை குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் வாக்குமூலத்தில், முகமது எம்ரோஸ் (32) என்பவர் தன்னை தனது வீட்டில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், நடந்ததை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தகவலை அறிந்த குடும்பத்தினரும், கிராம மக்களும் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். இதையடுத்து ஏராளமானோர் குற்றச்சாட்டுக்குள்ளான நபரின் வீட்டை முற்றுகையிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

கூட்டத்தினரின் தாக்குதலில் முகமது எம்ரோஸ் உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். கூட்டத் தாக்குதலில் தொடர்புடையதாக இதுவரை 8 பேரை கைது செய்துள்ள போலீசார், மாணவி அளித்த கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்தும் தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் மாணவி கூறிய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் சட்டத்தை கையில் எடுத்த கூட்டத் தாக்குதல் தொடர்பாகவும் தனி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரு சம்பவங்களின் உண்மை நிலையை கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.