மத்திய பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், வகுப்பு நேரத்தில் மாணவர்களுக்கு திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாகா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை மூலம் ‘துரந்தர்’ திரைப்படம் காட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளியில் கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் புரொஜெக்டர் மூலம் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் மாவட்ட கல்வி அதிகாரியின் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மாவட்ட கல்வி அலுவலர் (DEO) நோட்டீஸ் வழங்கியுள்ளார். மாணவர்களின் கல்வி நேரத்தில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நேரத்தை மாணவர்களின் கற்றலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
