மகாராஷ்டிராவின் நாலாசோபாரா மேற்கு பகுதியில் உள்ள களம்ப என்ற இடத்தில் ‘துளசி ஃபார்ம் ஹவுஸ்’ இயங்கி வருகிறது. இந்த பண்ணை வீட்டில் தசரத் இபாத் என்பவரும், அவரது மனைவி அனுஷாவும் தினக்கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுடன் இவர்களது ஒரு வயது மற்றும் ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை ஆயுஷும் அங்கேயே இருந்து வந்தான்.
கடந்த மே 29 அன்று மாலையில், இந்த பண்ணை வீட்டிற்கு வாடிக்கையாளர்கள் பலர் வந்திருந்தனர். இதனால் குழந்தையின் தந்தை தசரத் வாடிக்கையாளர்களை கவனிப்பதில் மிகவும் பிஸியாக இருந்தார். அதே நேரத்தில், தாய் அனுஷா சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். பெற்றோர் இருவரும் வேலையில் மும்முரமாக இருந்த அந்த நேரத்தில், குழந்தை ஆயுஷ் விளையாடிக்கொண்டே யாருக்கும் தெரியாமல் நீச்சல் குளத்தின் அருகே சென்றுவிட்டான்.
அங்கு யாரும் கவனிக்காத நேரத்தில், குழந்தை திடீரென நீச்சல் குளத்து தண்ணீரில் விழுந்துவிட்டான். பொதுவாக, ஆபத்து எதுவும் நடக்காமல் இருக்க நீச்சல் குளத்தின் அருகே ஊழியர்கள் சிலர் நின்றுகொண்டிருப்பது வழக்கம். ஆனால், இந்த சின்னஞ்சிறு குழந்தை தண்ணீரில் விழுந்ததை அங்கு நின்றிருந்த ஊழியர்கள் யாரும் கவனிக்கத் தவறிவிட்டனர்.
खेळता खेळता स्विमिंग पूलमध्ये उडी, चिमुकल्याच्या मृत्यूने एकच हळहळ pic.twitter.com/Q8i3ymI2eH
— News18 Marathi (@News18_marathi) May 30, 2026
சிறிது நேரம் கழித்து, அங்கு வந்திருந்த சில இளைஞர்கள் நீச்சல் குளத்தில் விளையாடச் சென்றபோது, குழந்தை தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து பண்ணை வீட்டு நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு குழந்தையை உடனடியாக மீட்டு காப்பாற்ற பல முயற்சிகள் செய்யப்பட்டும், பரிதாபமாக குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது.
இந்த ஒட்டுமொத்த சோக சம்பவமும் அங்குள்ள பண்ணை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
