புது தில்லியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு தொண்டையில் ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் உணவு விழுங்குவதில் இருந்த சிரமம் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது உணவுப் குழாயில் சுமார் 2×1 சென்டிமீட்டர் அளவுள்ள கூர்மையான கண்ணாடித் துண்டு ஒன்று சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

நோயாளி சாப்பிடும்போது எதிர்பாராதவிதமாக இந்த கண்ணாடித் துண்டு உள்ளே சென்றுள்ளது. சுமார் 12 முதல் 15 நாட்களாக அது உணவுப் குழாயிலேயே இருந்ததால், உயிருக்கே ஆபத்தான தொற்று மற்றும் உள் ரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் இருந்தும், அவர் சாதாரண வலி என்று நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள் அபூர்வா பாண்டே மற்றும் சஞ்சீவ் சோப்ரா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், நோயாளிக்கு அவசர கால ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சையை மேற்கொண்டனர். அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன், வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் அந்த கண்ணாடித் துண்டு எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி பாதுகாப்பாக வெளியில் எடுக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் குணமடைந்த அந்த நபர் தற்போது வீடு திரும்பியுள்ளார். உணவு விழுங்குவதில் தொடர்ந்து சிரமம், நெஞ்சுப் பகுதி அசௌகரியம் அல்லது கடுமையான தொண்டை வலி இருந்தால், அதனை சாதாரண பிரச்சனை என்று அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.