உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தனது மனைவி காணாமல் போனதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், திடீரென கணவரின் அலைபேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க உதவியது. அந்த எண்ணைப் பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர், அப்பெண் லக்னோவில் தனது காதலனுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவதைக் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்கின் சுவாரசியமான திருப்பம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தைக் கண்டு, அது தனது மகள் தான் என்று அப்பெண்ணின் தந்தை அடையாளம் காட்டியிருந்தார்.

அதன் விளைவாக, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கும் சென்றனர். தற்போது ‘கொலை செய்யப்பட்டதாக’ கூறப்பட்ட பெண்ணே உயிருடன் பிடிபட்டதால், காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பொய்யான அடையாளத்தை வைத்து ஒரு குடும்பத்தையே சிக்க வைத்த இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.