பெங்களூரு பண்டிகொடிகேஹள்ளி பகுதியில் நேற்று மாலை 6:30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சோகமான சம்பவத்தில், சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் கனமான செங்கற்கள் மற்றும் சிமெண்ட் சிலாப்புகளுக்கு அடியில் மூன்று குழந்தைகள் சிக்கிக்கொண்டனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த அஃபீன் என்ற ஐந்து வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் சமான்வி என்ற மற்றொரு குழந்தை படுகாயமடைந்து, சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அந்த சுற்றுச்சுவர் ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில், பெரிய விரிசலுடன் காணப்பட்டதாகவும், அதன் உரிமையாளரின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகலூர் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த சிறுவன் அஃபீனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காயமடைந்த குழந்தையின் நிலைமையைக் கண்காணித்து வரும் போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, பழுதடைந்த சுவரின் தரம் மற்றும் அதன் உரிமையாளரின் அலட்சியம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்த   பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.