இங்கிலாந்தின் கியா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடையேயான பலப்பரீட்சை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. மாலையில் சுட்டெரித்த வெயிலில் கூலிங் கிளாஸ் அணிந்து ஆடிக்கொண்டிருந்த பிலிப்ஸை, ஆர்ச்சர் தனது அசுர வேக பவுன்சர் பந்துகளால் கடுமையாகச் சோதித்தார்.
ஆர்ச்சரின் அனல் பறக்கும் பந்து ஒன்று பிலிப்ஸின் உடலைத் தாக்கிய போதிலும், அவர் சற்றும் பதற்றமடையாமல் புன்னகையுடனும், தனது அணியினரைப் பார்த்து ‘தம்ஸ்-அப்’ (Thumbs-up) காட்டியும் தம்மால் ஆர்ச்சரின் வேகத்தைச் சமாளிக்க முடியும் என அதிரடி காட்டினார். இங்கிலாந்தின் இளம் பந்துவீச்சாளர்களான அறிமுக வீரர் சோனி பேக்கர் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்த நிலையிலும், பிலிப்ஸ் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை மீட்டுள்ளார்.
Some bravery this from Glenn Phillips, batting with shades on while facing Jofra Archer…
I want to be like him when I’m grown up! pic.twitter.com/YaqF7YPrBD
— Khanyiso Tshwaku (@kaymorizm) June 17, 2026
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்தின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தைப் பெற்றாலும், அதை பெரிய ரன்களாக மாற்றத் தவறினர். டாம் பிளெண்டல் அரைசதம் அடிக்க, டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஓரளவிற்கு ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் நியூசிலாந்து தடுமாறியது.
அந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ், ஆர்ச்சரின் அச்சுறுத்தும் ஷார்ட்-பிட்ச் பந்துகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, உடம்பில் அடிகள் வாங்கியும் அசராமல் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், கூலிங் கிளாஸ் அணிந்தபடி ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சை புன்னகையோடு எதிர்கொண்ட பிலிப்ஸின் இந்த ‘கெத்தான’ அணுகுமுறை ஓவல் டெஸ்ட்டின் மறக்க முடியாத மாஸ் தருணமாக மாறியுள்ளது.
