சர்வதேச அளவில் பொதுத்துறை ஊழலை அடிப்படையாகக் கொண்டு ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்ட 2025-ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளது. மொத்தம் 182 நாடுகள் பங்கேற்ற இந்த ஆய்வில், இந்தியா 91-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 96-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5 இடங்கள் முன்னேறி இந்த நிலையை எட்டியுள்ளது. 100-க்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் இந்தியா இந்த ஆண்டு 39 புள்ளிகளைப் பெற்றுள்ளது; இது கடந்த ஆண்டின் 38 புள்ளிகளை விட ஒரு புள்ளி அதிகமாகும்.
உலக அளவில் ஊழல் மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் மீண்டும் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பின்லாந்து இரண்டாம் இடத்தையும், சிங்கப்பூர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் 135-வது இடத்திலும், இலங்கை 121-வது இடத்திலும் பின் தங்கியுள்ளன.
இருப்பினும், ஊழலுக்கு எதிராகச் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க டிஜிட்டல் முறைகள் புகுத்தப்பட்டாலும், அடிமட்ட அளவில் லஞ்சத்தை ஒழிக்க இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.
