காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், பிரியங்கா காந்தியை பிரதமராக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பிரியங்கா காந்தியை பிரதமராக்கினால் தனது பாட்டி இந்திரா காந்தியைப் போலவே அண்டை நாடுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார் என்றும், அவர் மிகவும் துணிச்சலான தலைவர் என்றும் புகழ்ந்து பேசினார்.
ராகுல் காந்தி குறித்துக் கேட்டபோது, ராகுலும் பிரியங்காவும் ஒரு முகத்தின் இரு கண்கள் போன்றவர்கள் என்று கூறி மழுப்பலாகப் பதிலளித்தார். இம்ரான் மசூத்தின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்திக்கு எதிரான அதிருப்தி நிலவுவதைக் காட்டுவதாக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
ராகுல் காந்தி மீது சொந்தக் கட்சியினரே நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், இதனால் காங்கிரஸ் குடும்பத்திற்குள்ளேயே அதிகாரப் போட்டி தொடங்கிவிட்டதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரியங்காவை முன்னிறுத்தும் இந்த முயற்சி, ராகுல் காந்தியின் தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.
