முன்பெல்லாம் பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக் பாதிப்பு என்பது 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு நோயாகப் பார்க்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக 20 முதல் 40 வயதுடைய இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே ஸ்ட்ரோக் பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆபத்தான மாற்றம் குறித்து நரம்பியல் நிபுணர்கள் தீவிர எச்சரிக்கை விடுக்கின்றனர். ஸ்ட்ரோக் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது அல்லது மூளையின் ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்படும்போது உண்டாகும் ஒரு அவசர மருத்துவ நிலையாகும்.
இளம் வயதினரிடையே ஸ்ட்ரோக் அதிகரித்து வருவதற்கு முதன்மையான காரணம் நமது மாறிய நவீன வாழ்க்கை முறைதான். தொடர்ச்சியான வேலைப் பளு, அதிகப்படியான மன அழுத்தம் , முறையற்ற தூக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை ரத்த அழுத்தத்தை உயர்த்தி, ரத்த நாளங்களைப் பாதிப்படைகின்றன. மேலும் ஜங்க் ஃபுட், அதிக காரம் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் மிகச் சிறிய வயதிலேயே உடல் பருமன் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஏற்பட்டு, ரத்த நாளங்களில் அடைப்பு உருவாக வழிவகுக்கிறது.
இதனுடன், இளம் வயதிலேயே புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்திருப்பதும் ஸ்ட்ரோக் ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது. புகைபிடித்தல் ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையைக் குறைத்து, ரத்த உறைதலை வேகப்படுத்துகிறது. அதேபோல, கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை சிறிய வயதிலேயே ஏற்படுவதும், அதை கவனிக்காமல் விடுவதும் ஸ்ட்ரோக் வர மிக முக்கியக் காரணியாக அமைகிறது.
இளம் வயதில் ஏற்படும் ஸ்ட்ரோக் பாதிப்பைத் தடுக்க நமது தினசரி பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது கட்டாயமாகும். தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்தல், சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், புகை மற்றும் மதுவை முற்றிலும் தவிர்த்தல் ஆகியவை நம்மைப் பாதுகாக்கும். மேலும், அவ்வப்போது ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்வதுடன், முகக் கோணல், கை கால்கள் மரத்துப் போதல், பேசத் தடுமாறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது உயிரைக் காக்கும்!
