அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தானை விடவும் சீனாவின் பங்கு மிக முக்கியமானது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கையின்படி அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.

இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17 சதவீதம் வரை சரிந்துள்ளதோடு, உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு அபாயமும் நீங்கியுள்ளது. முன்னதாக இந்த அமைதி முயற்சிக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், சீனா தற்போது திரைக்குப் பின்னால் நடந்த உண்மைகளை வெளியிட்டுள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்த உடன்படிக்கையை எட்ட அமெரிக்க மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்களை மொத்தம் 26 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட, ஈரானை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைத்ததில் சீனாவின் பங்கை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து 5 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளன. இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.