இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள ஒரு பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் பலர் மீட்கப்பட்டுள்ளனர். பல மாடி கொண்ட அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி திங்கள்கிழமை பிற்பகலில் இடிந்து விழுந்தது. சம்பவம் நிகழ்ந்த வேளையில் மாணவர்கள் பிரார்த்தனைக்காக உள்ளே கூடியிருந்தனர். “104 பேர் மீட்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக இருக்கின்றனர், ஆனால் 37 பேர் உயிரிழந்தனர்” என தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் யுதி பிரமந்தியோ தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து சில உடல் பாகங்களை மீட்டுள்ளனர். இது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய பேரிடர் முகமை அதிகாரி புடி இரவான், “மீட்பு பணிகள் சுமார் 60 சதவீதம் முடிந்துள்ளன. விரைவில் மீதமுள்ள பணிகளும் முடிவடையும்” என தெரிவித்துள்ளார்

விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், ஆரம்ப தகவல்களின்படி, தரமற்ற கட்டுமானம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு பகுதி இடிந்ததின் அதிர்வுகள் மற்ற பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால், மீட்பு பணிகள் மிகவும் சிக்கலானதாக அமைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பள்ளி கட்டிடம் விடிந்து விழுந்த விபத்தில் 37 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் இன்னும் 27 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.