மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதா ஆற்றில் உள்ள பர்கி அணை அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட தாயின் உடல், பார்ப்போர் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

டெல்லியில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்த தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று காலை மீட்டனர். அப்போது, தன் மகனைக் காப்பாற்றப் போராடிய அந்தத் தாய், குழந்தையைத் தனது மார்போடு இறுக்கமாக அணைத்தபடி உயிரற்ற நிலையில் கிடந்த காட்சி மீட்புப் படையினரையே கண்கலங்கச் செய்தது. இவர்களுடன் வந்த தந்தை மற்றும் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்தில் உயிர் தப்பிய சையத் ரியாஸ் ஹுசைன் என்பவர் தனது திகிலூட்டும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, வானிலை திடீரென மாறி பலத்த புயல் வீசியது. கண்ணிமைக்கும் நேரத்தில் படகு நிலைகுலைந்து தண்ணீர் புகுந்தது. என் மனைவி, மாமியார் மற்றும் பேரன் என் கண் முன்னாலேயே மறைந்து போனார்கள். எங்கும் மரண ஓலம்… படகு மூழ்கத் தொடங்கியதும் நானும் நீரில் மூழ்கினேன் என்றார்.

நீரில் மூழ்கிய ரியாஸ், மூச்சு விட முடியாத நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் ஒரு இடுக்கில் சிக்கியுள்ளார். அவரது தலை மட்டும் தண்ணீருக்கு மேலே இருந்ததால் உயிர் பிழைத்துள்ளார். “என் கண் முன்னாலேயே சடலங்கள் மிதந்து சென்றன. மீட்புக் குழுவினர் என்னைப் பார்த்தது ஒரு அதிசயம்” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இதுவரை 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்குத் தப்ப உதவும் ‘லைஃப் ஜாக்கெட்’ அணிந்திருந்த படகின் கேப்டன் மகேஷ் படேல் உயிர் தப்பினார். இருப்பினும், 5 குழந்தைகள் உட்பட இன்னும் 9 பேர் மாயமாகியுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படையினர்மற்றும் உள்ளூர் போலீஸார் மாயமானவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.